வாஸ்து












விண்ணில் சஞ்சாரம் செய்து கொண்டிருக்கும் கோடானுகோடி நட்சத்திர மண்டலங்களும் அவற்றின் பிரதிநிதிகளில் ஒன்றாக விளங்கும். சூரியன் கட்டுப்பாட்டிற்குள் இயங்கும் கோள்களும் மனிதனது வாழ்வை நிர்ணயம் செய்கின்றன.  இதுவே நமது முன்னோர்களாக விளங்கிக் கொண்டிருக்கும் ஞானிகள் கண்டுணர்ந்த உண்மை.  பாரத பூமியில் தோன்றிய ஞானிகள் மட்டுமல்லாமல் பிறநாட்டு மேதைகளும் ஒத்துக் கொள்ளும்  உண்மையான நிலைப்பாடாகும்.

                மனிதன் விதிக்கு கட்டுப்பட்டவன் என்றும், விதியை மதியால் வெல்லலாம் என்றும் நம்முன்னோர்கள் வகுத்துக் காட்டியது உண்மையாகும்.  இரண்டும் முரண்பட்டக் கருத்துக்களாக இருப்பினும் உண்மையான உண்மையினை உணரலாம்.  விதியை மதியினால் வென்று காட்டலாம் என்று கூறுவது எந்தநிலையில் என்றால் தனிப்பட்ட மனித வாழ்வில் சாத்தியமாகக் கூடியதே.  காலத்தையும், தன்னையும் உணர்ந்துகொள்ளும் பொழுது அந்த நிலை சாத்தியமாகும்.  அது எப்படியெனில் விதியின் போக்கை அறிந்து கொள்ள இதுவரை எந்த ஒரு விஞ்ஞான கோட்பாடுகளையும் விஞ்ஞானிகள் கண்டுணர்ந்து தெரிவிக்கவில்லை.  அவ்வாறான கோட்பாடுகளை விஞ்ஞானத்தால் கண்டுணர்த்தவும் இயலாது.  ஆனால் நமது மெய்ஞானகள் "ஜோதிட சாஸ்த்திரம் " மற்றும் மனையடி சாஸ்திரம்" என்ற உயரிய கலைகளை நமக்கு தந்தருளி விதியின் போக்கை அறிந்து கொள்ள உதவியுள்ளார்கள்.

"தீதிலா மயனார் சொன்ன
   சிற்பசாஸ் திரமாம் நூலை
நீதியாய் தமிழி னாலே
நிலைபட உரைக்கலுற்றேன்,"
மனையடி சாஸ்திர நூற்பா ஆகும்.

மனிதனுக்கு விதிக்கப்பட்ட  விதியினை விஞ்ஞான யுக்திகளால் அறிய இயலாது.  மெய்ஞானத்தின் மூலமே அறிய இயலும்.  நமது மெய்ஞானிகள் இடைவிடாது இயங்கும் கிரகங்களின் சஞ்சாரத்தை கொண்டு வானியல் கலையை வகுத்துக் கொடுத்து விதியின் போக்கை அறியச் செய்துள்ளனர்.  நமது ஜன்ன கால கிரஹசஞ்சார நிலைகளைக் கொண்டு அதற்கேற்ப இயற்கையோடு இணைந்து வாழத் தயார் படுத்திக் கொள்வதே அறிவுடையோர் கடமையாகும்.  இதுவே ஜோதிட வழிகாட்டியாகும்.  தனி மனித வாழ்விற்கு அவரவர் ஜாதகப்படி வீடு அமைத்துக் கொள்ள ஜாதகத்தில் 4ஆம் இடம் 5ஆம் இடம் 12ஆம் இடம் முக்கியஸ்தானங்களாகும். இந்த ஸ்தானங்கள் சுப கிரஹ க்ஷேத்திரங்களாக இருப்பினும், சுப கிரஹபார்வை பெற்றிருப்பினும் அவர்களுக்கு நல்ல மனையும், நல்ல வீடும் அமையும்.  ஒருவரது ஜாதகத்தில் ஒன்றிற்கு மேற்பட்ட வீடுகள் அமைவதற்கு 4,5 மற்றும் 12ஆம் வீடுகள் வலுப்பெற்றிருக்க வேண்டும்.  4,5 மற்றும் 12ஆம் வீடுகள் வலுக்குறைந்துள்ள ஜாதகருக்கு வாழ்நாள் முழுக்க வாடகை வீட்டிலிலேயே வாழ்க்கை நடத்த வேண்டிய கட்டாயமாகும். இதில் மனையடி சாஸ்த்திரம் கூறுகின்ற உண்மையென்னவெனில் சரியான மண்ணின் தன்மைகள், வாசல், உள்-அறைகள் அமைந்திருக்கின்ற முறைப்படியே பலன்கள் நமக்கு கிடைக்கும்.  பூர்வ ஜென்மஸ்தானம் லக்னத்திற்கு 5இடமாகும்.  இதையொட்டியே நல்ல குடியிருப்பு மனைகள் அமையும், 4ஆம் இடமும் வலுவுடன் அமைந்தால் இன்றும் சிறப்பினையும் 12 ஆம் இடம் வலுப்பெற்றால், அயன, சயன, சுகபோகங்கள் மிகவும் சிறப்புறும் தன்மைகளும் உண்டாகும்.  கிரகங்கள் சரியாக இருந்தாலும் மண்ணும், மனை கட்டுகின்ற இடமும் இன்னும் அதிக வலுவினை ஏற்படுத்தித் தரும்.  இப்பேற்பட்ட அமைப்பினை மனையடி சாஸ்த்திரம் கூறுகின்ற வழியின்படி மனை அமைத்துக் கொள்வோருக்கும் என்றும் குறைவில்லாத வாழ்வுவினை ஏற்படுத்தித் தரும்.

     ஒருவரது ஜாதகத்தில் 12 ராசிகளைக் கால புருஷனாகப் பாவித்து விண்ணில் காணப்படும் அளப்பறிய பிரபஞ்சக்கதிர் வீச்சுக்களின் நன்மை தீமைகளை நாம் அறிந்து நமது விதியின் போக்கை சரி செய்ய உதவியுள்ளனர்.  ஜனன காலத்தில் சஞ்சரிக்கும் கிரக அடைவுகளுக்கு ஏற்பவே அந்தஸ்து, பொருளாதார மேம்பாடு, வாக்கு வன்மை, உறவுகள், ஆஸ்திகள், மனைவி, மக்கள், ஜீவனம், ஆயுட்காலம் போன்றவை அமைவதால் கிரக நிலைகளை ஆய்வு செய்து ஒருவனுக்கு ஏற்படக் கூடிய அனுகூலம், பிரதிகூலம் ஆகியவற்றை நிர்ணயம் செய்து எக்காரியத்தையும் செய்ய வேண்டியுள்ளது.  நமக்கு திருமணம் எப்பொழுது என்பதை பருவகாலம் வந்ததும் அறிந்து அதற்கான முயற்சிகளில் இறங்குகிறோம்.  அதேபோல் வீடு, வாசல் அமைத்துக் கொள்ள ஏதுவான காலம் ஏது என்பதை அறிந்து அதற்கான முயற்சிகளில் இறங்குவதே சாலச் சிறந்தது.

     நமக்கு சொந்தமாக வீடுகட்டும் யோகம் உள்ளதா? காலம் பூராவும் வாடகை வீட்டில்தான் வசிக்க வேண்டுமா? வீடு கட்டினால் கடனாளியாகி விடுவோமா?  அல்லது வீட்டைக் கட்டினால் வியாதிகள் அண்டுமா? அரசாங்க வீட்டில் வசிக்க வேண்டி வருமா? அல்லது அந்நிய நாட்டில் வசிக்க வேண்டி வருமா?  கட்டிய வீட்டில் தொடர்ந்து வசிக்க இயலுமா?  அல்லது வீட்டை விற்க வேண்டி வருமா?  நல்லவர்கள் மத்தியில் வீடு அமையுமா?  தீயவர்கள் மத்தியில் வசிக்க வேண்டி வருமா? நாம் கட்டும் வீடு நமது சந்ததியினருக்கு பயன்படுமா? அல்லது சந்ததிகளால் வீடு வாசல் பறிபோகுமா? புதியதாக இடம் வாங்கி வீடு கட்டுவது நல்லதா? அல்லது கட்டிய வீட்டை வாங்கி புதுப்பித்து வாழ்வதா?
இப்படி பற்பல சந்தேகங்களும் நமக்கு எழக்கூடும்.  நாம் நமது பிறந்த நேரக்கிர நிலைகளை வைத்தே மேற்கண்ட சந்தேகங்களைப் போக்கிக் கொள்ள இயலும்.  எந்த ஒரு பௌதீக சாஸ்திரமும் இக்கேள்விகளுக்கு விடை கூற முடியாது.  வான் உயிரியல் என்னும் ஜோதிட சாஸ்த்திரமே இக்கேள்விகளுக்கு விடையளிக்கிறது. மனையடி சாஸ்த்திரம்  என்பது  ஜோதிட சாஸ்திரத்தோடு தொடர்புகொண்டது.  மனையடி சாஸ்த்திரம் என்ற இயற்கை விதிகளைப் பயன்படுத்தக் கால நேரம் என்பதே முக்கியமானதாகும்.  இந்த கால நேரத்தை ஜோதிட சாஸ்த்திரமே  தெளிவு படுத்துவதால் மனையடி சாஸ்த்திரமும், ஜோதிட சாஸ்த்திரமும் இரண்டறக் கலந்ததாகும்.

வீடு வாசல் அமைத்துக் கொள்வதற்கு முன்னம், நமது பிறந்த நேரக்கிரஹ நிலைகளை ஆய்வு செய்து சுப, அசுப நிலைகளை அறிந்து செயல்படுவது அறிவுடையோர் கடமையாகும்.  "சிறுகக் கட்டி பெருக வாழ்" என்பது ஆன்றோர் வாக்கு,  முன்பின் யோசிக்காமல் கையில் காசு இருக்கின்றதே என்ற நினைப்பிலோ, அல்லது கடன் கிடைக்கின்றது என்பதாலோ வீட்டைக் கட்டி துன்பத்தை விலை கொடுத்து வாங்குவது உசிதமல்ல.  வீடு  என்பது இயற்கை சக்திகளை உள்ளடக்கியது.  ஒரு வரைமுறைக்கு உட்பட்டு வீடு வாசல்களை உருவாக்கினால்தான் சுபிட்சம் கிட்டும்.  இல்லையெனில் அமைதியற்ற வாழ்க்கை அமைந்து விடும்.  விதிப்படிதான் எல்லாம் நடக்கின்றதென்றால் பின்னர் ஏன் வரைமுறைக்கு உட்பட்டு வீட்டைக் கட்ட வேண்டும் என்று நினைக்கலாம்.  காரணம் அவரவர் உடல் அமைப்பிற்கேற்றவாறுதான் அளவெடுத்து சட்டை தைத்துக் கொள்ள வேண்டும்.  வீட்டையும் அவரவர் ஜனன ஜாதக அமைப்பிற்கேற்றவாறுதான் அமைத்துக் கொள்ள வேண்டும்.

                ஜனன ஜாதகத்தில் நான்காம் வீடு என்னும் மாத்ரு ஸ்தானத்தை வைத்தும், பூமி காரகன் என்னும் செவ்வாயை வைத்தும், வசதி வாய்ப்புகளைத் தெரிவிக்கும் சுக்கிரனை வைத்தும், கால புருஷனின் நான்காம் வீடான கடக ராசியின் அதிபதியான சந்திரனின் நிலையைக் கொண்டும் நமக்கு அமையக்கூடிய வீடு, வாசல், மனை யோகங்களைப் பற்றித் தெரிந்து கொள்ளலாம்.  மேலும் கால புருஷனானது 10 ஆம் வீடான கர்ம ஸ்தானத்தை வைத்தும் நாம் அறிந்து கொள்ளலாம்.  4ஆம் பாவத்தைப் பற்றிச் சரிவர ஆய்வு செய்த பின்னரே நாம் வீடு கட்ட முயற்சிப்பது நல்லது.  சுருங்கக்கூறின் ஜோதிட சாஸ்திரம் எப்போது வீடு கட்டலாம் என்பதை தெளிவுறத் தெளிவுப்படுத்துவதாகும்.

மனையடி சாஸ்திரத்தை பொறுத்தவரை பாரம்பரியமான நூல்கள் உள்ளன.  அவற்றில் காணப்படுகின்ற விபரங்கள், தகவல்கள், அளவுகள் ஆகியவை மிகவும் பிரமிக்க வைக்கின்றன. 

பிறந்த நேரம், ஜாதகக் குறிப்பு இல்லாதவர்கள் மனை யோகம் பெறுவது எப்படி?

ஜாதகம் இருப்பவர், இல்லாதவர் ஆகிய இருவருக்கும் நம் முன்னோர்கள் மயன், தேவச்சன் இவர்களால் அனுபவத்திலும், ஆராய்ச்சியிலும் கண்டறிந்து கொடுத்திருக்கின்ற எந்த எந்த மாதங்களில் எந்த நேரத்திலும் கொடுத்திருக்கிறார்களோ?  அந்த மாதத்திற்குரிய வாசல் அமைத்து வீடு கட்டுவதற்கு ஏதுவாக இருக்கும்.  இதுவே வாஸ்து என்பது.

வாஸ்து சாஸ்திரம், மனையடி சாஸ்த்திரம் என்கிற இரு நிலைகளும் ஒன்றானதா? வேறுபாடு உள்ளதா?

வாஸ்து சாஸ்திரம்:

நிலத்துக்கு கீழே உள்ள காந்த சக்தி ஓட்டத்தின் சாதக, பாதக அம்சங்கள், நிலத்துக்கு மேல் கட்டப்பட்ட கட்டிடங்களில் வசிப்பவர்களை பாதிக்கும் என்று ஜெர்மனியிலும், வேறு சில நாடுகளிலும் ஆராய்ச்சி செய்து கண்டுபிடித்திருக்கின்றார்கள்.  அதேபோல் பூமிக்கு அடியில் உள்ள நீரோட்டத்தின் சாதக, பாதக அம்சங்கள் மேலேயுள்ள கட்டிடங்கள் பாதிக்கும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து சொல்லியிருக்கின்றார்கள்.  வாஸ்து சாஸ்த்திரம் என்பது ஜோதிடம்,எண் கணிதம், ஆகியவற்றோடு தொடர்புடையது, வாஸ்து என்னும் சொல்லுக்கு "தங்குமிடம்"வசிப்பிடம் என்று எல்லா ஆசிரியர்களும் பொருள் கூறுவார்கள்.  நாம் ஒருவரது பேச்சையோ, செயலையோ விமர்சனம் செய்யும் பொழுது "வாஸ்தவம்தான்" நீங்கள் செய்தது வாஸ்தவமான செயல் என்று குறிப்பிடுகிறோம்.  ஒருவரது பேச்சிலோ, செயலிலோ, உண்மை, யதார்த்தம் நேர்மை தென்பட்டால், அதாவது ஒளிவு மறைவு இல்லாமல் இயற்கையாக இருக்கும் பட்சத்தில் "வாஸ்தவம்" என்ற சொல்லை ஒப்புமை செய்கின்றோம்.  எனவே வாஸ்தவம் என்றால் இயற்கை என்ற இன்னொரு பொருளும் உண்டு.  இயற்கை என்னும் சக்தியை வரையறுக்கப்பட்ட நியதிகளை கடைபிடித்து வீடு வாசலை உருவாக்கும் கலையே வாஸ்து சாஸ்திரம் ஆகும்.

வாஸ்து பூஜை

கால புருஷனின் பிரதிநிதியான சூரியனுக்கும், பூமண்டலத்தின் பிரதிநிதியான பூமிக்கு ஓர் நல்லிணக்க பாலத்தை அமைக்க செம்மையான நேரத்தை அறிந்து வீடு அமைக்க முற்படும் போது இயற்கை என்னும் உண்மை சக்திகள் நம்மிடம் குடிகொள்ள நாம் ஒரு குறிப்பிட்ட நேரத்தை தேர்ந்தெடுத்து வேண்டுதல் செய்கிறோம்.  அந்த வேண்டுதலே வாஸ்து பூஜை.  குறிப்பிட்ட நேரத்தை தேர்ந்தெடுப்பதன் நோக்கம் என்னவெனில் பூமி மற்றும் ஆகாய வெளியினின்று வெளிப்படும்.  பல்வேறு சக்திகள் ஒரே சீராக கிடைப்பதில்லை.  பூமியின் சுழற்சி வேகம், கதிபேதம் போன்றவற்றாலும் ஆகாயவெளியில் காணப்படும் கோள்கள்,நட்சத்திரங்கள் மற்றும் புலன்களுக்கு அப்பாற்பட்ட பல்வேறு பொருட்களின் தொடர் இயக்கங்களாலும், சக்திகளின் வெளிப்பாடுகளில் மாற்றங்கள் ஏற்படுகின்றது.  நல்ல விளைவகளையும், தீய விளைவுகளையும் வெளிப்படுத்தக்கூடிய சக்திகள் பிரபஞ்சத்தில் நிறைந்துள்ளன.  அந்த நல்ல சக்தியினைப் பெரும்பொருட்டு குறிப்பிட்ட நேரத்தை தெரிவுசெய்து பூமி பூஜை அல்லது வாஸ்து பூஜை செய்வது மிகமிக அவசியமாகும்.  நல்ல சக்திகள் வெளிப்படும் கால நேரத்தை நம் முன்னோர்கள் மிக தெளிவாக வெளி காட்டியுள்ளார்கள்.  பூமி ஒரு குறிப்பிட்ட நேர்கோட்டில் சஞ்சாரம் செய்யும்பொழுது பிரபஞ்ச சக்திகள் வெளிப்படும் நிலையினையே "வாஸ்து புருஷன் விழிப்பு நிலை" என்று கண்டறிந்து, அதனை பஞ்சாங்கம், நாட்காட்டிகள் ஆகியவற்றில் அனைவரும் எளிதாக தெரிந்து கொள்ள வேண்டும் என்கிற நோக்கில் இன்றைய கால கட்டத்தில் குறிப்பிட்டு காட்டியுள்ளார்கள்.

நாம் எந்த ஒரு காரியத்தையும் நவக்கிரஹங்களது சஞ்சாரங்களால் ஏற்படும் நல்ல நேரம், கெட்ட நேரம் என்பதை அறிந்து செயல்படுவது வழக்கமான ஒன்று,  திருமணம், சீமந்தம், காது குத்துதல், உபநயனம், விதை விதைத்தல், கதிரறுத்தல், கல்விபயிலுதல், பிரயாணம் செய்தல் போன்ற பல்வேறு செயல்களையும் நல்ல நேரம் பார்த்தே செய்கின்றோம்.  கிரஹ ஆரம்பம் செய்வதும் அதைப்போன்றதுதான்.  ஆனால் வாஸ்து பூஜை செய்யும் காலம், கால புருஷனது பிரதிநிதியான சூரியனின் சஞ்சாரத்தையும், வாஸ்து புருஷனின் பிரிதிநிதியான பூமியின் சஞ்சாரத்தையும் மட்டுமே கருத்தில் கொள்கின்றோம். வாஸ்து புஜை செய்யும் நேரம் என்று பஞ்சாங்கங்களில் குறிப்பிட்டிருக்கும் நேரங்களில் நாள், நட்சத்திரம், யோகம், திதி, கரணம், லக்னம், போன்ற பிற விஷயங்கள் விலக்கப்பட்டு விடுகின்றன.  இந்நிலை ஆன்றோர்களாலும், சான்றோர்களாலும், ஒத்துக் கொள்ளப்பட்ட மாபெரும் உண்மையாகும்.   வாஸ்து பூஜையின் போது பூமிக்கும் சூரியனுக்கும் உள்ள நேரிடையான தாக்கமே பிரதானமாகக் கருதப்படுகின்றது.


பூமி பரப்பின் மீது நீளம், அகலம், உயரம் என்னும் முப்பரிமாணம் கொண்ட வீட்டை உருவாக்கும் காலம், பூமியின் மின்காந்த ஆற்றல், துருவ மின்னோட்டம், புவிஈர்ப்பு விசை மற்றும் சூரியனது ஈர்ப்பு விசை, ஆகாய வெளியினின்று பூமியை வந்தடையும் அளப்பறிய பிரபஞ்ச சக்திகள் ஆகிய அனைத்தும் நமக்கு அவசியம் தேவைப்படுவதால் "வாஸ்து பூஜை" செய்வது மிக அவசியமானதாகவே கருத வேண்டும்.

No comments:

Post a Comment